நடிகர் சுந்தர் சி மீது ரூ. 46 லட்சம் மோசடி செய்ததாக புகார்

சென்னை

டிகரும் இயக்குனருமான சுந்தர் சி மீது ரூ. 46 லட்சம் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் இணை செயலாளராக பணி புரிந்தவர் வேல்முருகன் (வயது 47).  இவர் நடிகரும் இயக்குனரும் மற்றும் பிரபல நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி மீது ஒரு புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “நான் சினிமாத் துறையில் 27 ஆண்டுகளாக இருக்கிறேன்.  90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன்.  4 படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன்.   சுந்தர் சி எனது நெருங்கிய நண்பர்.  15 வருடங்களாக எங்களுக்குள் பழக்கம் உள்ளது.  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வரும் தொலைக்காட்சி தொடரான “நந்தினி”யின் கதையை நான் எழுதி இருக்கிறேன்.

அந்தக் கதையை என்னிடம் இருந்து வாங்கிய சுந்தர் சி எனக்கு ரூ. 50 லட்சம் தர ஒப்புக் கொண்டார்.  ஆனால் அவர் ரூ. 4 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு மீதி உள்ள ரூ.46 லட்சத்தை தரவில்லை.  நான் அதை கேட்டால் அடியாட்கள் வந்து என்னை மிரட்டுகிறார்கள்.  பணம் கிடையாது என்றும் என்னால் முடிந்ததை பார்த்துக் கொள்ளலாம் என்றும் அடியாட்கள் கூறுகின்றனர்.

சுந்தர் சி இதுபோல பலரை ஏமாற்றி உள்ளதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.  சுந்தர் சி மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மேலும் சுந்தர் சி யால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அபாயம் ஏற்படலாம் என அச்சம் உள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவிகப்பட்டுள்ளது.  இந்த மனு மீது விசாரணை நடத்துமாறு அண்ணாநகர் துணை கமிஷனருக்கு உத்தரவு இடப் பட்டுள்ளது.
English Summary
Complaint was given against Sundar c