அமித்ஷாவின் கொல்கத்தா சாலைப் பேரணியில் குழந்தைகள் உரிமை மீறல்

கொல்கத்தா

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடத்திய கொல்கத்தா சாலைப்பேரணியில் ஏராளமான குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினர் நடத்தும் இந்துத்வா பேரணிகளில் சிறு குழந்தைகள் அதிகம் கலந்துக் கொள்கின்றனர். குறிப்பாக ராமநவமி, ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளின் போது ராமர் மற்றும் கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் இந்த ஊர்வலத்தில் நடனம் ஆடிக் கொண்டு வருவது வழக்கமாகும். இது மதம் தொடர்பான விஷயம் என்றாலும் இந்த ஊர்வலத்தினால் குழந்தைகள் மிகவும் உடல் சோர்வுற்று விடுவதாக பரவலாகம் கூறப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 14 ஆம் தேதி அன்று கொல்கத்தா நகரில் சாலைப்பேரணியை நடத்தினார். சாகித் மினாரில் இருந்து சிம்லா தெரு வரை நடந்த இந்த சாலைப் பேரணியில் வடக்கு கொல்கத்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் ராகுல் சின்ஹாவுக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இந்த பேரணியில் ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.

அதில் ஒரு வாகனத்தில் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் உடற்பயிற்சி செய்தவாறு கலந்துக் கொண்டனர். அவர்கள் உள்ளாடை போன்ற ஒரு சிறு கால் சட்டை மட்டுமே அணிந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் அவர்கள் பயிற்சிக்கு நடுவில் மேற்கு வங்க அரசை எதிர்த்து உரத்த குரலில் கோஷமிட்டு வந்தனர். இது குறித்து விசாரிக்கையில் அவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி நகரில் இருந்து அழைத்து வரப்பட்டது தெரிய வந்தது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் ஆர்வலர் ஜுமா சென், “பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள குழந்தைகளை உஜ்ஜைனி நகரில் இருந்து அழைத்து வந்து இந்த பேரணியில் தொடர்ந்து பல மனி நேரம் பயிற்சி செய்ய வற்புறுத்தப் பட்டுள்ளனர். இது குழந்தைகள் உரிமை சட்ட மீறலாகும்.

இந்தியா ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச குழந்தைகள் நல சட்டத்தின் படி குழந்தைகள் அபாயகரமான அல்லது மிகவும் கடினமான பணிகளில் அமர்த்தப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது,

பாஜகவின் சாலைப் பேரணியில் இந்த விதிமுறைகளை மீறி குழந்தைகளை கடும் பயிற்சியில் ஈடுபடுத்தி உள்ளனர். வெகு தூரத்தில் இருந்து அழைத்து வரப்படும் குழந்தைகளை இவ்வாறு அரை நிர்வாணமாக பொது இடத்தில் மணிக்கணக்கில் பயிற்சி செய்ய சொல்வது மனிதாபிமானமற்ற செயலாகும். இது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amitrsha Kolkatta road show, Child reights commission, Children involved
-=-