அசாமைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, ரயில் பெட்டியில் குடிபோதையில் இருந்த ஆண்களால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, தனது தோழிக்கு வீடியோ அனுப்பியுள்ளார். இதையடுத்து, அதிகாலை நேரத்தில் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் அருகே அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் காம்ரூப் பெருநகர மாவட்டம், போண்டா பகுதியைச் சேர்ந்த ஹிமாஷ்ரி போரா (20), நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்றுள்ளார். கவுகாத்தியில் தேர்வு இருந்ததால், மற்றவர்களுக்கு முன்பாகத் தனியாக ரயிலில் ஊர் திரும்பியுள்ளார்.

ரயில் பெட்டியில் பாதுகாப்பற்ற சூழல்!

அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 12.15 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து 22503 என்ற எண் கொண்ட ரயிலில் ஹிமாஷ்ரி ஏறியுள்ளார். அவருக்கு அறிமுகமான அவினாஷ் என்பவர் ரயில் நிலையம் வரை உடன் சென்றுள்ளார்.

பொதுப் பயணச்சீட்டுடன் ரயிலின் எஸ்-2 பெட்டியில் அவர் ஏறியது அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் தனது அண்ணியையும் தோழி ஒருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஹிமாஷ்ரி, ரயில் பெட்டியில் நிலவிய சூழல் தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது அண்ணி கூறுகையில், “ரயிலில் ஏறியதும் என்னையும் தனது தோழியையும் தொடர்புகொண்டார். பெட்டி முழுவதும் குடிபோதையில் ஆண்கள் இருப்பதாகவும், அங்குள்ள சூழல் தனக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.

மேலும், ரயில் பெட்டியில் இருந்த சூழலைக் காட்டும் வீடியோ ஒன்றையும் தனது தோழிக்கு ஹிமாஷ்ரி அனுப்பியுள்ளார்.

அதிகாலை 2.30 மணிக்கு மேல் துண்டிக்கப்பட்ட தொடர்பு!

அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் ஹிமாஷ்ரியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், ரயில்வே உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) அவரைத் தேடிப் பார்ப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்துகொள்வதாகப் புகார் வந்ததை ரயில்வே நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்ரீகாகுளம் சாலை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி துணை ஆய்வாளர் உள்ளிட்டோர் ரயிலில் ஏறி, பொதுப் பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தேடியுள்ளனர். ஆனால், ஹிமாஷ்ரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது குறித்து பின்னர் எந்தத் தகவலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை எனக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

“அவர் பாதுகாப்பாக இருப்பதாக எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இப்போது ஆந்திராவில் தண்டவாளம் அருகே அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த இரண்டு பைகளும் அப்படியே கிடைத்துள்ளன” என அவரது அண்ணி தெரிவித்துள்ளார்.

தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு!

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பொண்டூரு – தூசி ரயில் பாதைப் பகுதிகளுக்கு இடையே ஹிமாஷ்ரியின் உடலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணைக்காக ஸ்ரீகாகுளத்தில் உள்ள அரசு ரிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பலாசா அரசு ரயில்வே காவல்துறை (GRP) தெரிவித்துள்ளது. எனினும், அவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொலையா? ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா?

ஹிமாஷ்ரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் அவரது குடும்பத்தினர், இது கொலையாக இருக்கலாம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், புகார் அளித்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, ரயிலில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஹிமாஷ்ரியை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவினாஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய ரயில் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அசாம் மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறையினருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அரசு ரயில்வே காவல்துறையினரும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர அசாம் அரசு நடவடிக்கை!

ஹிமாஷ்ரியின் உடலை அசாமுக்குக் கொண்டுவரத் தேவையான உதவிகளை மாநில அரசு செய்து வருவதாக திமோரியா தொகுதி எம்எல்ஏ தபன் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆந்திராவில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு, கவுகாத்திக்கு நேரடி விமானங்கள் இல்லாததால் விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குடும்பத்தினர் யாரும் அங்கு நேரில் சென்று உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாமல், விரைவாக உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

ரயிலில் தனக்குப் பாதுகாப்பில்லை என அச்சத்தை வெளிப்படுத்தி வீடியோ அனுப்பிய மாணவி, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது அவரது மரணத்துக்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.