புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வகையில், தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து, துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது,  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலில்  பாஜக தரப்பில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதன் காரணமாக,   தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார்.

 கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன்  திமுக எம்பி கனிமொழியிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, பாஜக தலைமை அவருக்கு ஆளுநர் பதவி வழங்கியது.  இதையடுத்து,  2019-ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமிக்கப்பட்டார். பின்னர், கிரண்பேடி ஓய்வைத் தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், ஆளுநர் பதவியை விட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே தனது ஆசை என கூறி வந்தார்.

இந்த நிலையில்,  தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்களைவை தேர்தலில் போட்டியிட  பாஜக தலைமையிடம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி, அவர் மேலிட உத்தரவுபடி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இரண்டு பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். அவர் புதுச்சேரியில் அல்லது வடசென்னை போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாஜக வெளியிட உள்ள வேட்பாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இடம்பெறும் என நம்பப்படுகிறது. தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், இல்லையென்றால், சென்னையில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன், ஏற்கனவே  கடந்த 2 009-ம் ஆண்டு மக்களைவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். 2006, 20011, 2016 சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார்.