பழனி: பழனி தண்டாயுதபானி  கோவிலில்  இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்  வெகுசிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விமர்சியாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்று. அதன்படி 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இன்று (18ஆம் தேதி)  திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் இன்று காலை கொடியேறியது. முன்னதாக நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து,  கொடியேற்றத்தைக் காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார்.
இதன்பிறகு,  அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றன.  தொடர்ந்து,  காலை 9.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் முதல் நாளான இன்று  பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 24-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றனர்.