சென்னை:
ந்திய கம்யூ. நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கிய நிலையில், த.மா.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. மேலும், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில், 16 தொகுதிகளின் பட்டியலை மார்க்சிஸ்ட் கட்சியும், 12 தொகுதிகளின் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.க. தலைமையிடம் அளித்திருந்தனர். இந்த நிலையில், தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீட்டில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் (சி.பி.எம்., சி.பி.ஐ.) தலா 4 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முன் வந்த நிலையில் இரட்டை இலக்கத்தில் ஒதுக்க மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாளை (04/03/2021) காலை நடைபெறுகிறது. கூட்டம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “மாநில நிர்வாகக் குழு கூட்டம் என்பது வழக்கமாக நடைபெறுவதுதான். தி.மு.க. உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெறும். பெண்ணைப் பார்த்த அன்றே திருமணம் செய்ய முடியாது; அதுபோல் தான் கூட்டணி பேச்சுவார்த்தையும்; தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைச் சுமுகமாக நடக்கிறது. பேச்சுவார்த்தைக் குழு பேசி வருகிறது” என்றார்.