நெட்டிசன்:

ஆர். பிரபாகர் (R Prabhakar) அவர்களின் முகநூல் பதிவு:

பிராமணர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பது இந்திய அளவில் என்னென்ன பின்னடைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள்தான் ஆய்வு செய்து எழுத வேண்டும்.

ஆனால் தமிழ் நாட்டு அளவில் அது என்னென்ன பின்னடைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை கொஞ்ச நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டதன் அடிப்படையில் என்னால் சில விசயங்களை உணர முடிந்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்தே எதிர்ப்பதாக சொல்லி வந்தாலும் திமுக மீது எப்பொழுதும் அதற்கு தீராத வெறுப்பும் அதிமுக மேல் மாளாத காதலும் இருப்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர முடியும்.

திமுகவின் மீதான வெறுப்பு சிபிஎம்மின் பிராமணத் தலைமையால் கட்டமைக்கப் பட்டது . அங்கே திமுக மீதான வெறுப்பு ஒவ்வொரு தோழருக்கும் சேனையாகத் தொட்டு வைக்கப்படுகிறது.

ஏன் சிபிஎம்மின் பிராமணத் தலைமைக்கு திமுக மீது வெறுப்பு என்பதை பார்க்க வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னான காலத்தில் இந்திய அரசியல் போராட்டங்களில் மிக முக்கிய போராட்டமாக பிராமண எதிர்ப்புப் போராட்டம் உருவானது. வடக்கில் அம்பேத்கர் அதை துவங்கி வைத்தார். தெற்கில் பெரியார் அதை உயர்த்திப் பிடித்தார். அறிஞர் அண்ணாவும் கலைஞரும் இரண்டு தளபதிகளாக பிராமண எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தி னார்கள். போராட்டம் வடக்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஆனால் தெற்கில் தீப்பிடித்து எரிந்தது. அதற்கு தமிழ் மண்ணின் மூன்று தலைவர்களே காரணம். அவர்கள் பெரியார் அண்ணா கலைஞர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிராமண எதிர்ப்பு அரசியல் என்பது புரியவே இல்லை. அதை புரிந்து கொள்ள முடியாதபடி பிராமணீயம் அவர்களின் கண்களை கட்டியிருந்தது. பிராமண எதிர்ப்புப் போராட்டத்தை துவக்கத்திலிருந்தே எதிர்ப்பவர்களாகவே கம்யூனிஸ்ட்கள் இருந்தார்கள். கம்யூனிஸ்ட்கள் வரலாற்றின் எதிர் திசையில் பயணித்த காலம் அது. அன்று தோழர்கள் பிராமண எதிர்ப்பு அரசியல் பேசியவர்களை ஹிட்லருடன் ஒப்பிட்டு சித்தரித்தார்கள்.

அண்ணா ஆரிய மாயை எழுதினால் தோழர் பி.ராமமூர்த்தி ஆரிய மாயையா? திராவிட மாயையா? என்று எதிர் புத்தகம் எழுதினார். ( பி. ராம்மூர்த்தி ஒரு பிராமனர்)

அந்த புத்தகத்தின் தகவல்களே அன்று களத்தில் திராவிட கருத்தியல்களை எதிர்ப்பதற்கு தோழர்களுக்கு ஆயுதமாக இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமணத் தலைமை அதன் தோழர்களை திராவிட கருத்தியல்களுக்கு எதிராக எந்த அளவிற்கு உருமாற்றி வைத்திருந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஜெயகாந்தனின் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்தான் சாட்சி. ஜெயகாந்தன்தான் சாட்சி.

ஜெயகாந்தன்தான் அந்த பிரமண தலைமையின் கருத்தியலுக்கு பலியான மிக முக்கியமான விக்டிம்.

ஜெயகாந்தன் மேடைதோறும் பிராமண ஆதரவு பிரச்சாரம் செய்பவராக இருந்தார். பிராமண பாதுகாப்பு மாநாடு நடத்தினார். பிராமணர்கள் எங்கு கூட்டம் கூட்டினாலும் போய் சிறப்புரை நிகழ்த்தினார். அந்த மேடைகளிலெல்லாம் பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் திட்டித் தீர்ப்பவராக இருந்தார். அண்ணாவையும் கலைஞரையும் அவர் லும்பன்கள் என்றார்.. பொறுக்கி பாட்டாளி வர்க்கத்தினர் என்று தமிழ் படுத்தியும் சொன்னார்

அந்த கோனங்கித்தனத்தின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் ஜெயகாந்தன் பிராமனராகவே உருமாறினார். வீட்டில் பஞ்ச கச்சம் கட்டுகிறவராகவும் , வீட்டிற்கு வருகிறவர்களை வாங்கோ, உட்காருங்கோ.. ஜலம் சாப்பிடறேளா என்று பேசுகிறவராகவும் மாறினார். இறக்கும் வரையில் அவர் பிராமன பாஷையில் இருந்து விடுபடவே இல்லை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதி புகழ் பெறத் துவங்கியவர், பின் வாழ் நாள் முழுவதும் பிராமண அழகியலை எழுதுகிறவராக மாறி ஜெய ஜெய சங்கர எழுதும் வரை பயணித்தார்..

அண்ணா இறந்த போது அண்ணாவிற்கான அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயகாந்தன் பேசிய பேச்சு அநாகரிகத்தின் உச்சம். திராவிட கருத்தியல் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமணத் தலைமை கொண்டிருந்த வெறுப்பிற்கான மிக முக்கியமான சான்று அது.

ஆக சிபிஎம் தோழர்களின் இன்றைய திமுக வெறுப்பு நிலையை, அன்று மாமனார் செய்த தை இன்று அவருடைய மருமகன்கள் பின் தொடர்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தன் ஒரு பானை சோற்றின் ஒரு சோறுதான். அன்று தோழர்கள் பெறும்பாலும் ஜெயகாந்தன் மன நிலையிலேயே திராவிட கருத்தியலை எதிர் கொண்டார்கள். பிராமண எதிர்ப்பு அரசியலின் அரிச்சுவடி கூட புரியாமல் இருந்தார்கள்.

இன்று பிராமண எதிர்ப்பு அரசியல் முக்கிய அரசியலாக இந்திய சமூகத்தில் வளர்ந்து நிற்கிறது. அந்த அரசியலுக்காகப் போராடியவர்கள் பேரறிஞர்களாப் பார்க்கப்படுகிறார்கள்.

தோழர்களும் அவர்கள் பங்கிற்கு வெட்கமில்லாமல் ”காலம் தோறும் பார்ப்பனீயம்” என்று புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது பாதிப்பாக நான் உணர்ந்தது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அடி மட்டத் தோழர்களை பேச வைத்தது. இதுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமணத் தலைமையால் ஏற்பட்ட விளைவுதான். இந்த பாவத்திற்கு நிகரான பாவத்தை உலகில் எந்த இடதுசாரி இயக்கமும் செய்திருக்காது.

அன்று இட ஒதுக்கீடுக்கான போராட்டம் தீவிரமாக இருந்த கால கட்டங்களில் தோழர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசினார்கள். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஒரு பிரிவை வைத்துக் கொண்டு மொத்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் பேசினார்கள். ”சுண்டல் விற்கிற பிராமணர்களை உங்களுக்குத் தெரியாதா என்று கேள்வி கேட்டார்கள். எத்தனை ஏழை பிராமண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து விட்டு இன்று தெருவில் நிற்கிறார்கள் தெரியுமா என்று கண்ணீர் விட்டார்கள். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று ஒரு புள்ளியை பேசத் துவங்கி இட ஒதுக்கீட்டிற்கு எதிரான எல்லா கொச்சையான வாதங்களையும் முன் வைத்தார்கள்.. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இன்று சமூகத்தில் புலங்குகிற பல எதிர்வாதங்கள் அன்று தோழர்களால் உருவாக்கப்பட்டதே. குறிப்பாக அதன் பிராமணத் தலைமையால் உருவாக்கித் தரப்பட்டதே.

மூன்றாவது முக்கியத் தாக்கமாக நான் உணர்ந்தது. தோழர்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் திமுக வெறுப்பு

திராவிட கருத்தியலின் அச்சாணி திமுகதான். எனவேதான் திமுகவை அழிப்பதற்கு எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அதையெல்லாம் தீவிரமாக பயன்படுத்திக்கொள்ள சிபிஎம் தவறியதே இல்லை..

திமுக பிளவு பட்டு எம்ஜிஆர் அதிமுக துவங்க எம்ஜிஆருக்கு பக்க பலமாகப் போய் நின்றார்கள்.

பின் மீண்டும் திமுகவில் பிளவு ஏற்பட்டு வைகோ பிரிந்து தனிக்கட்சி துவங்க வைகோவுடன் போய் நின்றார்கள்.

பின் திமுகவிற்கு எதிராக விஜயகாந்துடனும் போய் நின்றார்கள்.

இப்பொழுதும் கூட ஒரு தோழரின் கையில் ஒரு கத்தியைக் கொடுத்து அவர் முன்னால் ஒரு அதிமுக மற்றும் திமுக தொண்டரை நிறுத்தி, ஒருவரை கொலைசெய்து கொல்லலாம் எந்த கேள்வியும்கிடையாது என்று சொன்னால், தோழர் ஒரு திமுக தொண்டரின் வயிற்றில்தான் கத்தியைப் பாய்ச்சுவார். இதுதான் சிபிஎம்மின் பிராமணத் தலைமை ஒரு தோழரின் மன நிலையில் உருவாக்கி வைத்திருக்கிற பாதிப்பு.

இவைகளெல்லாம் நான் போகிற போக்கில் உணர்ந்தது. அரசியல் ஆய்வாளர்கள் புள்ளி விபரங்களுடன் இன்னும் நிறைய தகவல்களை சொல்ல முடியும்.

’பிராமணத் தலைமையும் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னடைவும் ‘ என்பது முக்கியமாக ஆய்வு செய்ய வேண்டிய ஒரு ஆய்வுப்பகுதி.

சிபிஎம் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஜாதி ஏற்றத்தாழ்வு பார்க்காதவர்கள்தான். ஜாதிய சிந்தனைகள் இல்லாதவர்கள் தான்.சிபிஎம் தலித் மக்களுக்காக ஆயிரம் போராட்டங்கள் நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் ஐம்பதாண்டுகாலமாக பொலிட் பீரோவில் ஒரு தலித்தும் இடம் பெறாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கிற ஃபாசிஸத்திற்கான காரணம் மிகவும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.

இந்திய அரசியலின் இரு முக்கிய நிகழ்வுகளான பிராமண எதிர்ப்பு இயக்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டம் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் எதிராக சில கோடி தோழர்களை செயல் பட வைத்ததுதான் பிராமணத் தலைமை செய்த மிக முக்கியமான பாதகம் என்று நினைக்கிறேன்.

அங்கே பிராமணத் தலைமை இல்லாமல் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமை இருந்திருந்தால் இந்த இரண்டு அரசியல் நிகழ்வுகளையும் முன்னெடுத்த இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருக்கும்.

தி.மு.க.வுக்கு தகுதி இல்லை..!