நெட்டிசன்:

சந்திரபாரதி (Chandra Barathi)  அவர்களின் முகநூல் பதிவு:

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டியும், அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் (ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் உட்பட) தமிழகத்திலிருந்து தலைநகர் தில்லி சென்று போராட்டத்தில் பங்கேற்றூ வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சட்டை அணியாமல் உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டு கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் எவரும் இது வரை சந்திக்கவில்லை. பாஜக வை சேர்ந்த சிலர் மட்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதாகவும், இதுவரை சந்திப்பிர்கான ஏற்பாடு நடை பெறவில்லை என்றும் கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்திப்பதிலும் தங்கள் உட்கட்சிச் சண்டையால், கட்சி சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். மாநிலங்களவையில் திமுக மற்ற விடயங்களை முன் வைத்து குரல் எழுப்பும் அளவிற்கு விவசாயிகள் போராட்டத்தை அவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்ற வருத்தமும் போராட்டக்காரர்கள் மத்தியில் உள்ளது.

சமூக வலைத்தளங்கள் தமிழக விவசாயிகளின் தில்லி போராட்டக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ள அளவிற்குக் கூட தமிழக காணொளி ஊடகங்கள் கொடுக்கவில்லை என்பதும் நிதர்சனமே. ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்துமா, விளைவு எப்படி இருக்கும், ஜெயாவின் உண்மையான அரசியல் வாரிசை ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துமா, தீபாவிற்கு ஆதரவு உண்டா, இல்லையா, ஸ்டாலின் செயல் தலைவராக சந்திக்கும் முதல் இடைத் தேர்தலில் தனது ஆளுமையை வெளிப்படுத்துவாரா என்றெல்லாம் விவாதம் மணிக்கணக்கில், பேசியதையே திரும்பத் திரும்பப் பேச மேடை அமைத்துக் கொடுத்துள்ள காணொளி ஊடகங்கள், ஜீவாதாரப் பிரச்சனைக்குப் போராடும் விவசாயிகள் பிரச்சனையை விவாதிக்க நேரம் ஒதுக்கத் தயங்குவது வியப்பே.

விவசாயிகள் தற்கொலைகளைத் தொடர்ந்து தன்னெழுச்சியான போராட்டம் ஏற்பட்டு, மாணவர்களோ, இளைஞர்களோ சில நூறுகளில் ஒரிடத்தில் கூடினால் மட்டுமே தங்கள் உபகரணங்களோடு களம் இறங்கும் கானொளி ஊடகங்கள், உத்தர பிரதேச விவசாயிகள் மட்டுமல்ல, தமிழக விவசாயிகளும் கடன் சுமையில் திணறுகிறோம், எங்களது கடன்களையும் ரத்து செய்து உத்தரவிடுங்கள் என வேண்டி தில்லி வெயிலில் போராட்டம் செய்பவர்களைப் புறக்கணிக்கக் காரணம் என்ன…கணொளி ஊடக ஆளுமைகளுக்கே வெளிச்சம்..விவசாயிகள் பிரச்சனைகளை கையிலெடுப்பது வசதிக்கேற்ப தானோ…என்னமோ போடா மாதவா, மனசுக்குள்ள வைச்சுக்க முடியல, புலம்பித் தள்ளியாச்சு…