புதுடெல்லி:

தமிழக மக்களவை தொகுதிகளில் திமுக பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என வட இந்திய தொலைக் காட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்தியா டுடே-மை ஆக்ஸிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு 4 தொகுதிகள் வரையிலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளிலிருந்து 38 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தி டைம்ஸ் நவ்- விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு 9 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 29 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை ஒப்பிடும் போது, இம்முறை 30% வாக்குகளை அதிமுக இழக்கும் என்றும், கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத திமுக, இம்முறை 29 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக்-சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு 11 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 27 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி ரிபப்ளிக்- ஜன் கி பாத் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அதிமுக-பாஜக கூட்டணி 9-13 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்என் நியூஸ் 18-ஐபிஎஸ்ஓஎஸ் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 8 முதல் 10 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 22-24 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ்எக்ஸ்-நேடா நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு 20 தொகுதிகளும், அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் 9 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம்.

டுடேஸ் சாணக்கியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், அதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 31 தொகுதிகளும் கிடைக்கலாம் என்றும்ல அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.