திருச்சி: 
சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கம்பமும் கலர் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி போக்குவரத்து காவல் துறை  தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலங்களில் ஊரடங்கில் வாகனங்கள் அதிகளவில் சாலைகளில் வாகனங்கள் செல்லாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கார், டூவிலர் என அதிக அளவில் சாலையில் செல்கிறது. வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும்போது பல்வேறு மன உளைச்சல்களிலும், இன்னல்களையும் சுமந்து வந்து நிற்கின்றனர்
இந்நிலையில், சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நிற்கும் போது இதமான சூழலை உருவாக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தலைமை தபால் நிலையம், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட சிக்னல்களில் இசை மழையில் நனைய வைக்கும் விதமாக கரோக்கி பாடல்கள் இசைக்கப்படுகிறது.
குறிப்பாக, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களின் பாடல்கள் கரோக்கி மூலம் இசைப்பது வாகன ஓட்டிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், திருச்சியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் விரைவில் இந்த முறை அமல்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் போக்குவரத்து சிக்னல்களில் கம்பம் முழுவதுமே சிக்னலை குறிக்கும்படி அதே நிறத்துக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.