சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 4  புதிய நீதிபதிகள் நியமிக்க மத்தியஅரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளில் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது, சில நீதிபதிகளை நியமிக்க  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம்  பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 15 நீதிபதிகள் இடங்கள் காலியாகவே உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நீதிபதிகள் 4 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்து கொலிஜியம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது. அதன்படி, மாவட்ட நீதிபதிகளான   ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வு செய்து  குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும். அதைத்தொடர்ந்தே புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார்.

புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயரும்.