டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை  மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி நாகரத்னா வரும் காலத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

காலியாக உள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகள் பதவிக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக  கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் உச்சநீதி மன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு கொடுக்கும் வகையில் தேர்வுசெய்தது.

அதன்படி,

  1. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா,
  2. குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத்,
  3. சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி,
  4. தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி,
  5. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா,
  6. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி சி.டி.ரவிக்குமார்,
  7. மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,
  8. குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி
  9. மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக்கோரி மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்தியஅரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அங்கிருந்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மத்திய சட்ட அமைச்சகம்  அனுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் முறைப்படி நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வர்.

உச்சநீதிமன்றத்துக்கு  ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. அதுபோல,  கொலீஜியம் முதன்முறையாக ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது.

நீதிபதிகள் நாகரத்னா, ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் தான் அந்த மூன்று பெண் நீதிபதிகள்.