சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும்,  வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர், பொறியாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், உணவக உரிமையாளர்கள், விடுதி நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில், தங்களிடம் பணிசெய்யும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தியுள்ளார்.

ராமேஸ்வரம் பகுதியில் மீனவப்பெண் ஒருவர் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த இறால் பண்ணையில் பணியாற்றி வந்த வடநாட்டு, இளைஞர்களால், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து,.தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். கட்டிடப் பணிகள் முதல் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருபவர்கள், காவல்காரர்கள்,  குல்ஃபி, பானிப்பூரி விற்பவர்கள் உள்பட அத்தனை பேர் விவரங்களும் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில் நபர்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்டராக்டர்கள், மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையார்கள், இறால் பண்னை உரிமையாளர்கள், பாணிபூரி மற்றும் குல்பிஐஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில ஒவ்வொரு நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்களை ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். தவனும்பட்சத்தில் நிறுவனத்தின்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து,  ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள வெளி மாநில நபர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என டிஜிபி அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.