கோவை

தேர்தல் பரப்புரையில் இந்து மதக் கடவுள்களை அடையாளப்படுத்தியதாகக் கமலஹாசன் மீதும் கமலஹாசனை விமர்சித்ததாக ராதா ரவி மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் கோவை தெற்கு தொகுதியில்  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டு வருகிறார்.    அவரை எதிர்த்து அதிமுக அணி சார்பில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியில் தீவிர தேர்தல் பரப்புரை நடைபெறுகிறது.

இந்த தொகுதிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி கமலஹாசன் பரப்புரை செய்தார்.   அப்போது அந்த பரப்புரை கூட்டத்தில் ராமர் மற்றும் அம்மன் வேடமிட்ட இருவர் கலந்துக் கொண்டனர்.   இதே தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பழனிகுமார் என்பவர் இதை சுட்டிக்காட்டித் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதையொட்டி கமலஹாசன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி பரப்புரை செய்தார்.  அப்போது அவர் கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ராதாரவி மீது வழக்குப் பதிந்துள்ளது.