கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசிகள் போடும் பணியில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  தற்போது தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.  எனவே இங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆயினும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்கள் விடிய விடிய வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்காகக் கோவை மாவட்ட ஆட்சியர் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் இரவில் இருந்தே மையங்களில் காத்து இருப்பதை மனதில் கொண்டு இந்த விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அளித்துள்ள விதிமுறைகள் பின் வருமாறு

  • தினமும் காலை 8 மணிக்கு வட்டார அளவில் சேமித்து வைக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் எந்தெந்த பஞ்சாயத்துக்களில் செலுத்தப்படும் என்பதும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும்.
  • அவ்வாறு அறிவிக்கப்படும் மையங்களில் காலை 10 மணி முதல் டோக்கன் வழங்கப்படும்
  • டோக்கன் வாங்கியவர்களுக்குக் காலை 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்
  • இதை அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இந்த மையங்களைக் கண்காணிக்க வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை உள்ளடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • பொதுமக்கள் மையங்களில் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்
  • மையங்களில் ஏதேனும் குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் மாவட்ட கொரோனா கட்டுப்பாடு அறை எண் தொலைப்பேசியான 1077க்கு இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம்
  • அரசின் முயற்சிகளுக்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பால் தொற்று குறைந்து வந்துள்ளதை மனதில் கொண்டு அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தொற்றினை முழுவதுமாக ஒழிக்க உதவ வேண்டும்.