தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 12 ம் தேதி நடந்த முதல் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஞாயிறன்று நடைபெற இருக்கும் சிறப்பு முகாமில், 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குவதன் மூலம், ஒரேநாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்ட திட்டமிட்டிருக்கிறது.

கோவையில் சரியான முறையில் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை, திமுக ஆட்சி அமைந்த பிறகு கோவை புறக்கணிக்கப்படுகிறது என்று பா.ஜ.க. தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையில், தமிழ் நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தரவுகள் வெளியாகியுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில், தமிழ் நாட்டிலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் தான் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரியவந்திருக்கிறது.