காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது பயன்படுத்தினார்.

இந்த மருந்து உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது, 1200 மில்லி கிராம் எடைகொண்ட இந்த மருந்தின் விலை, ரூ. 1,19,500 ஒரு பாக்கெட்டில் இரண்டு டோஸ்க்கு உண்டான மருந்து இருக்கும், இதன் ஒரு டோஸ் விலை ரூ. 59,750.

தற்போது இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க ரோச்செ நிறுவனம் முடிவு செய்திருக்கிறது அதற்காக சிப்லா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

முதல் கட்டமாக இப்போது கையில் உள்ள மருந்தை சிப்லா நிறுவனம் மூலம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது, அடுத்ததாக ஜூன் மாத இறுதியில் 2 லட்சம் பேருக்கு பயன்படக்கூடிய அளவில், 1 லட்சம் பாக்கெட்டுகளை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஆக்சிஜன் உதவி தேவைப்படாத, சிறிய அளவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த மருந்து குறைந்தபட்சம் 40 கிலோ உடல் எடை உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மருந்து மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை முகாம்கள் மூலமே விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை சாப்பிடுவதன் மூலம், 70 சதவீதம் உயிரிழப்பு தவிர்க்கப்படும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.