கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா?

Must read

கூட்டணி கலாட்டா-6:

மிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள், யாது? அவைகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை, எவை,   3வது அணி உருவாகுமா? எந்தெந்த கட்சிகள் தனித்து போட்டியிடும்,  ரஜினியின் வாய்ஸ் யாருக்கு கிடைக்கும் என பல யூகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது.

அரசியல் நோக்கர்களும் தமிழக அரசியல் களத்தில்  நிகழப்போகும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் முடிவுகள், அதில் கட்சிகள் பெற்ற வாக்குகள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் கட்சிகளுக்கு கிடைக்குமா என்பது குறித்து சற்றே ஆராயலாம்…

2016 சட்டமன்ற தேர்தலில் 4முனை போட்டி  நிலவியது.  திமுக கூட்டணியில் திமுக மட்டும் 174 இடங்களில் தனித்து போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில்,  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்  227 இடங்களில்  போட்டியிட்டது.

திமுக கூட்டணியில், திமுக உடன் காங்கிரஸ்,  இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவப்படை, மக்கள் தேமுதிக என 9 கட்சிகள் இணைந்து களமிறங்கின.

அதிமுக கூட்டணியில், அதிமுக, தமிமும்அன்சாரியின் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்மாநில முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய குடியரசு கட்சி, கொங்குபேரவை கட்சி (தனியரசு),  சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் (எர்ணாவூர் நாராயணன், கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை  என 9 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தேமுதிக தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி என்ற 3வது அணியில் தேமுதிக, மதிமுக, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தமாகா  ஆகிய 6 கட்சிகள் இணைந்து களமிறங்கின.

பாஜக தலைமையிலான 4வது அணியில், பாஜக, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் (யாதவர் கட்சி) ஆகியவைகள் இணைந்து போட்டியிட்டன.

இதுதவிர நாம் தமிழர் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைகட்சி, எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

இவ்வாறாக 4 முனை போட்டி ஏற்பட்டதால், வாக்கு வங்கிகள் சிதறின. இதனால், பெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் மட்டுமே தங்களது வாக்கு வங்கியை நம்பி களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதில், அதிமுக வெற்றிவாகை சூடி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது,  திமுக கூட்டணி 89 இடங்களையும் கைப்பற்றின. சுமார் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது.

இந்த தேர்தல் களத்தை  கவனத்தில் கொண்டே  திமுக, அதிமுக தலைமைகள்,  வரஇருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை. தங்களது கூட்டணியை மேலும் வலுவாக்கி வாக்கு வங்கிகளை சிதறவிடாமல் பாதுகாக்கும் முயற்சியில் கடுமையாக முயற்சிக்கும் என நம்பலாம்.

ஆனால், அந்த வாக்கு வங்கியை சிதறடிக்கவே பாஜக போன்ற கட்சிகள், தங்களது பினாமிகளை களமிறக்கி, திராவிட கட்சிகளிடம் இருந்து வாக்குகளை சிதறச்செய்யும் முயற்சியில் ஈடுபடும் என்பதையும் மறுக்க முடியாது.

சில  அரசியல் கட்சிகளும்,  ஜாதி ரீதியிலான  அமைப்புளும்,  தனித்து போட்டியிட்டு, தங்களது இனம் மற்றும் மதத்தினரின் வாக்குகளை பிரிக்கத் தொடங்கினால்,  அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால், தமிழகத்தில், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலம் போன்ற சில மாநிலங்களில் ஏற்பட்டதுபோல தொங்கு சட்டமன்றம் ஏற்படும் வாய்ப்பு உருவாகி விடும்..

ஏனென்றால் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை கணக்கிடும்போது, முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிட்டால் அவர்களின் ஆட்சிக்கனவு பகல் கனவாகிவிடும்.  ஆட்சி அமைக்க மற்றக்கட்சிகளை நாட வேண்டிய சூழல் உருவாகிவிடும், அதனால் வலிமையான, உறுதியான நிர்வாகத்தை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

அதனால், திராவிட கட்சிகள் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணியை ஏற்படுத்தவே  முயற்சிக்கும் என நம்பலம்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 40.8% வாக்குகள் பெற்றிருந்தது. திமுக 31.6% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.  காங்கிரஸ் கட்சி 6.4 சதவிகித வாக்குகள்தான் கிடைத்தது. காங்கிரஸ் கட்சி மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலோ, அதன் வாக்கு வங்கி சற்றே கூடியிருந்தாலோ திமுக ஆட்சியை கைப்பற்றியிருக்கும்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் வாங்கு வங்கி குறைந்ததும், வன்னியர் பெல்ட் எனப்படும் விழுப்புரம் உள்பட சில வட மாவட்டங்களில் பாமக தனது வலிமையை  பறைசாற்றி  5.3% வாக்குகளை பெற்றதும் திமுக ஆட்சி அமைக்க முடியாததற்கு  காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

இதுமட்டுமின்றி, பாஜக 2.8% வாக்குகளும், தேமுதிக 2.4% வாக்குகள், நாம் தமிழர் கட்சி 1.1%  வாக்குகளும், மதிமுக 0.9% வாக்குகள், விசிக 0.8% வாக்குகள்,  சிபிஐ             0.8% வாக்குகள்,  சிபிஎம் 0.7% வாக்குகள்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  0.7% வாக்குகள்,  தமாகா 0.5%  வாக்குகள் என தனித்தனியாக, அந்தந்த கட்சிகள்,  தங்களது  ஆதரவாளர்களின் வாக்குகளை பிரித்துக்கொண்டு சென்றுவிட்டன. நோட்டாவுக்கும் 1.3%. வாக்குகள் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியது.

இவற்றில்,  பெரும்பாலான கட்சிகளின் வாக்குகள் திமுகவுக்கு ஆதரவானவைதான். ஆனால், கூட்டணி அமைப்பதில் திமுக கோட்டைவிட்டதன் விளைவு, திமுகவின் ஆட்சி கனவு தகர்ந்தது.

தமிழக அரசியல் களத்தில், அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், காங்கிரஸ் கட்சிக்கு என தனி வாக்கு வங்கி உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், கட்சித்தலைவர்கள் தொண்டர்களிடையே நெருங்கி வர முயற்சிக்காத நிலையில், அதன் வாக்குவங்கி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த இளம் தலைமுறை வாக்காளர்கள், மாற்று கட்சிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்..

இவ்வாறாக தமிழக அரசியல் களம் உள்ள நிலையில், இதை அடிப்படையாக வைத்தே 2021 சட்டமன்ற தேர்தல் களம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை பிடிக்க ஆர்ப்பரிக்கும் திமுக, அதிமுக தலைமை, வாக்கு வங்கிகளை வைத்தே, கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்.

ஏனென்றால்,  2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலையும், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும் ஒப்பிடும்போது,  கூட்டணியால் வாக்கு வங்கிகளில் சிதறியிருப்பது தெள்ளத்தெளிவாகி தெரிகிறது.

2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டு, 29 பிரதிநிதி களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிகவால், 2016 சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாத அவலம் ஏற்பட்டது. ஆனால், 2011 சட்டமன்ற தேர்தல் வெற்றியை வைத்தே தேமுதிக பொருளாளரான பிரேமலதா இன்று வரை திமுக, அதிமுக இரு கட்சிகளிடையே அரசியல் பேரம் நடத்தி வருகிறார். தற்போது சசிகலாவையும் நாடியுள்ளார். இது, அவரது  பக்கா அரசியல் பேரம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதுபோல, 2011 சட்டமன்ற தேர்தலில் 3 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று சபையை அலங்கரித்த நிலையில், 2016ல் ஒருவர் கூட சபைக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத நிலை உருவானது. ஜாதியை மட்டுமே முன்னெடுத்து அரசியல் செய்துவரும் பாமகவுக்கு, தேர்தல் முடிவு சவுக்கடியாகவே விழுந்தது.

இவைகள் மட்டுமின்றி, கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலையோ அந்தோ பரிதாபம். தமிழக சட்டமன்றத்தின் 14 சட்டப்பேரவையிலும் இடம்பிடித்த கம்யூனிஸ்டுகள், 15வது சட்டப்பேரவையில் அடியோடு காணாமல் போன அதிசயமும் நிகழ்ந்தது. அதுபோல, முஸ்லிம் வாக்குகளை நம்பி களமிறங்கிய மனித நேய மக்கள் கட்சி,  ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பிய சரத்குமாரின் கட்சி போன்றவை, மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன.

ஆனால், 2016ல் ஆட்சி அமைத்த ஜெயலிதாவோ அடுத்த 6 மாதங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தனக்கு சாதகமாக்க ஸ்டாலின் தவறிவிட்டதும், ஆட்சியை கைப்பற்ற திமுகவுக்கு வாய்ப்பிருந்தும், அதை ஸ்டாலின் நழுவவிட்டதும், கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் ஸ்டாலினிடம் இல்லை என்றே விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும் அதிமுக ஆட்சி இரட்டை தலைமையுடன் 5 ஆண்டுகளை கடந்துவிட்டது.

இருந்தாலும்,  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களத்தில், திமுக, அதிமுக கட்சிகளுக்கு 2016 தேர்தல் முடிவுகள் திராவிட கட்சிகளுக்கு மாபெரும் படிப்பினையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதை கவனத்தில் கொண்டே 2021 சட்டமன்ற தேர்தலை திமுக, அதிமுக தலைமை தேர்தலை அணுகும் என நம்பப்படுகிறது.

ஆனால், திமுக, அதிமுக கூட்டணியில் எழுந்துள்ள கூட்டணி சலசலப்பு, தொகுதி உடன்பாடு மட்டுமின்றி  சசிகலா மீதான அரசியல் எதிர்பார்ப்பு போன்றவை, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் என்ன தாக்கத்தை உருவாக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

8 முற்றும் 7

கட்டுரையாளர்: ATS Pandian, Patrikai.Com

கூட்டணி கலாட்டா -தொடர்1:  கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை….

கூட்டணி கலாட்டா-2: கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?

கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி தரும் திமுக…

கூட்டணி கலாட்டா-4: நாடாளுமன்ற அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா….?

கூட்டணி கலாட்டா-5: சசிகலா வருகையால் அதிமுக கூட்டணி சிதறுமா?

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article