சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது தொடர்பாக, அதிமுக பாஜக இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவரது மகளுக்கு மத்திய அமைச்சர் பதவிகேட்டு வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று மே 2ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  திமுக கூட்டணியை எதிர்த்து, அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஜக மாநில தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை ஐபிஎஸ் போன்றோர் தோல்வியை சந்தித்தனர். இருந்தாலும் 4 தொகுதிகளை கைப்பற்றியதால், அதை பெரிய சாதனையாக பாஜக நினைத்து சந்தோசப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இரு கட்சிகள் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் அமைத்த கூட்டணியே காரணம் என்று விமர்சித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என நேரடியாக குற்றம் சாட்டினார்.

பாஜகவை  நாம் (அதிமுக) கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. எனவே தான் தோல்வியடைந்து விட்டோம், பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் பரபரப்பாக பேசினார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நேரடி குற்றச்சாட்டு, பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

சிவி சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அவர், தனது டிவிட்டர் பக்கத்தில், உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என்று சிவி சண்முகம் பேசியதாக வெளியான பத்திகை செய்தியை ஆதாரமாக பதிவிட்டிருந்தார்.

அதுபோல,  தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் எஸ். ஆர். சேகர், ‘’ BJPயுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் – Ex ADMK மந்திரி சிவி சண்முகம். இவர் கருத்தை ஓபிஎஸ் -இபிஎஸ் ஏற்கிறார்களா? பதில் சொல்லவேண்டும். இல்லையெனில் action எடுக்க வேண்டும். 87403 ஓட்டுப் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ ’என்று  கூறியிருக்கிறார்.

இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டு மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே,  அதாவது  சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தொகுதி ஒதுக்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டு, பின்னர் பாஜக தலைமை தலையிட்டு சுமூக நிலையை உருவாக்கியது. ஆனால், தேர்தலுக்கு பிறகு, இரு கட்சிகளுக்கு இடையே மீண்டும் முட்டல் மோதல் தொடர்வது, அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்துள்ளதையே சுட்டிக்காட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல், கூட்டணியில் முறிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில்தான், சமீபத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்ற பதில் தெரிவித்திருந்தார்.

தற்போது, கே.டி.ராகவன், எஸ்.ஆர்.சேகர் போன்றோர் அதிமுகவுக்கு எதிராக மல்லுகட்டியிருப்பது கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு ஒருபுறம் போய்க்கொண்டிருக்கிற நேரத்தில், மற்றொரு புறம்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., விரிவாக்கப்படும் மத்திய அமைச்சரவையில்,  தனது மகனுக்கு இடம்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.