நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை

Must read

புதுடெல்லி:

டந்த 1999-ம் ஆண்டு ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய இணை அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் நிலக்கரித்துறை இணையமைச்சராக திலிப் ராய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திலிப் ராய் மட்டுமல்லாமல், அப்போது நிலக்கரித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய இரு அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கவுதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அக்ராவாலா ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 பேருக்கும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கேஸ்ட்ரான் சுரங்க நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும், கேஸ்ட்ரான் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம், கிரித் பகுதியில் உள்ள பிரம்மாதியா நிலக்கரி சுரங்கத்தை கேஸ்ட்ராஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு (சிடிஎஸ்) ஒதுக்கீடு செய்த வழக்கில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த சுரங்கத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக கடந்த 1999-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்த திலிப் ராய் சிடிஎஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்தார்.

இந்த நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திலிப் ராய்க்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இன்று தீர்ப்பளித்தார்.

அதில், “நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் முறைகேடாக ஒதுக்கீடு செய்தவழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் ராய், நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கவுதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அக்ராவாலா ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், இவர்கள் தலா ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

ஜாமின் மனுவை திலிப் ராய் தாக்கல் செய்த நிலையில் ரூ.ஒரு லட்சம் பிணைத் தொகையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. நவம்பர் 25-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் நீதிமன்றம் திலிப் ராய்க்கு அனுமதியளித்தது.

ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் திலிப் ராயும் முக்கியமானவர். வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ ஆட்சியில் பிஜூ ஜனதா தளம் கூட்டணியில் இருந்த போது திலிப் ராய் நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பிஜூ ஜனதா தளம் கட்சியின் சார்பில் மூன்று முறை சட்டப்பேரவைக்கும் திலிப் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா முதல்வராக அப்போது இருந்த பிஜூ பட்நாயக் அமைச்சரவையில் திலிப் ராய் அமைச்சராகவும் இருந்தார்.

பிஜூ ஜனதா தளம் கட்சியில் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு கட்சி விரோதச் செயல்பாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு கட்சியிலிருந்து திலிப் ராய் நீக்கப்பட்டார். அதன்பின் சுயேச்சையாகப் போட்டியிட்டு திலிப் ராய் எம்.பி. ஆனார்.

பின்னர் 2009-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த திலிப் ராய் , 2018-ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகினார். நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யப் போகும் சூழலில் திலிப் ராய் கட்சியிலிருந்து விலகினார். தற்போது எந்தக் கட்சியிலும் சேராமல், அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article