சென்னை: தரவுகள் அடிப்படையில் 5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில், ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. கடைசி நாள் அமர்வான இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.
இன்றைய அமர்வில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பேரவை விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, 5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்புகள் நடத்தப்பட்டதாகவும், அதன்படி 51 தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தகுதியானர்களுக்கு 5 சவரன் வரை கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக தோ்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய முதல்வர் கூறியதாவது, உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பால், தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.6,000 கோடி செலவாகும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவா்களின் பெயா், விவரம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை விவரங்கள், அரசு ஊழியரா, கூட்டுறவு பணியாளரா, அரசு மற்றும் கூட்டுறவு சங்க பணியாளா்களின் உறவினரா, பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றிருக்கிறாரா, அடமானம் வைத்துள்ள நகை எடையளவு, பெறப்பட்ட கடன் தொகை என்பன உள்ளிட்ட 37 வகையான விவரங்கள் கூட்டுறவு சங்க அலுவலா்களால் பெறப்பட்டு கணினி வழியாக தனிப் படிவங்களில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.