சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிப்பூர் பெண்கள் மீது நடந்த வன்முறையை கண்டித்து டிவீட் செய்துள்ளார்.

கலவர பூமியான மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் சென்று மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாக அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த மே மாதம் 4ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவாகியுள்ளது.  இந்தியாவையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில்,

“மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவத்தைக் கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனிதக் குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் குணத்தைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.