சென்னை

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் களப்பணி ஆற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணி அமைத்துள்ளது.  மற்ற கட்சிகள் கூட்டணி இன்றி போட்டியிடுவதால் பல முனைப் போட்டி உண்டாகி உள்ளது.   அதே வேளையில் மற்ற கட்சிகள் பிரிந்துள்ளதால் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக மட்டுமே ஆட்சி – அதிகாரம் – பதவி அனைத்தையுமே, சமூகநீதி எனும் லட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க கருவியாகக் கருதுகிற இயக்கமாக உள்ளது.

தற்போது சமூகநீதியை வெட்டி சாய்க்க வெறி கொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் ஏதேச்சதிக்காரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்க அகிம்சை போரை திமுக தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நாளை கூட்டப்படும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற்றவுள்ள தீர்மானமும் கடைக்கோடி தமிழ் மாணவருக்கு மருத்துவ கல்வி வாய்ப்பு கிட்டவேண்டும் என்பதே ஆகும்.

நான் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகக் காணொலியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன்.   நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக முழுமையான வெற்றி பெற்றிடத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களப்பணியாற்ற வேண்டும்   நமது கூட்டணி கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.