சென்னை: மிக்ஜாம் மழை வெள்ள பாதிப்பின்போது சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சியில் புயல் பாதித்த இடங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. வெள்ளத்தில் பலரது வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு விட்டன. உடமைகள் நீரில் மூழ்கி வீணாகி விட்டது.  ஒருசில பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் புறநகரில் சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வட சென்னையில் மழை நீருடன், கழிவு நீர் கலந்ததோடு கச்சா கழிவு எண்ணெய் கலந்து மக்கள் வசிக்கவே தகுதி இல்லாத இடமாக மாறி விட்டது. நோய் தொற்றும் பரவி வருகிறது.

இந்த சூழலில் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் டன் குப்பைகள் தூய்மை பணியாளர்களைக்கொண்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று  சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில்  நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மிக்ஜாம் புயல் பேரிடரில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

அதன்படி, 3429 தூய்மை பணியாளர்களுக்கு தலா 4000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ. 1,37,16,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.