ஸ்ரீரங்கம்:  புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (12.12.2023) திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. 25ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள்தான் என்றாலும் கூட, ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும்.

இந்த ஆண்டு  வைகுண்ட ஏகாதசி விழா இன்று (டிச.12) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.  வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது டிச.12 முதல் 22 வரை பகல் பத்து திருவிழாவாகவும், 23 முதல் ஜனவரி 2 வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. டிசம்பர் 23ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.  இந்த 21 நாட்கள் பகல்பத்து, ராப்பத்து என்று தொடர்ந்து, நடைபெறும் இத்திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது. பின்னர் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை (13.12.2023) புதன்கிழமை திருமொழி திருவிழா தொடங்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில், மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,   “கடந்த வருடம் சுமார் 2 லட்சம் பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு வருகை புரிந்தனர். இந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு வரும் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.

மேலும், பகல் பத்து மற்றும் இராப்பத்தின்போது திருச்சி மாநகர காவல்துறையினர் மட்டும் 380 பேர் 2 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு, பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதுடன், போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோயிலின் உட்புறத்தில் 120 சிசிடிவி கேமராக்களும், கோயிலைச் சுற்றி வெளிப்புறத்தில் 102 கேமராக்களும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 14 கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை புறக்காவல் நிலையத்திலிருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

120 சிசிடிவி கேமராக்களிலும் 70,000 குற்றாவாளிகளின் புகைப்படங்களை FRS (Face Recognizing Software) முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குற்றவாளிகள் கோயிலில் நடமாடினால், கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து, மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து, காவல் துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும்.

நாளை முதல் 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கோயிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் எதிரே உள்ள கிழக்குவாசல், நுழைவு வாயில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததினால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஒட்டி, அந்த கிழக்கு கோபுரத்தின் வழியாகச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.