சென்னை: சென்னை 47-வது புத்தகக் காட்சியை இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைக்கிறார்

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக்காட்சியான பபாசியின் 47-வது சென்னை புத்தகக் காட்சி இன்று (ஜனவரி 3ந்தேதி) தொடங்கப்படுகிறது. இதை  இன்று மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  (பபாசி) சங்கத்தின் சார்பில்  47-வது சென்னை புத்தகக் காட்சி (Chennai Book Fair) சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்  இன்று ( 3 ஆம் தேதி) முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும்.

புத்தக்காட்சியை பார்வையிட நபர் ஒன்றுக்கு  ரூ.10 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பபாசி வெளியிட்ட அறிக்கையில்,  இந்தாண்டு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புத்தகக் காட்சி 19 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து விழாவில் 6 பேருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அதனுடன் பபாசி சார்பில் பதிப்பகச் செம்மல் விருது உட்பட சிறப்பு விருதுகள் 9 பேருக்கு தரப்படும்.

கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பபாசியில் உறுப்பினராக இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு 150-க்கு மேலான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2,000 சதுர அடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அறநிலையத்துறையின் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதுதவிர பல்வேறு புதினங்கள், புதிய நாவல்கள், சரித்திர நாவல்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. தினமும் மாலை வேளையில் சிந்தனை அரங்கில் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் பேச்சுகளும் நடைபெற உள்ளன.

மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.