சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு நிறுவனமான டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வான 10ஆயிரம் பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  பணி நியமன ஆணை வழங்கினார்.

அப்போது,  அரசு வேலைக்கான மவுசு என்றுமே குறையாது. அரை அணா காசு என்றாலும் அரசாங்க காசு என்று கிராமங்களில் சொல்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும், கடந்த  2022ம் ஆண்டு  ஜூன் மாதம், காலியாக உள்ள பல்வேறு அரசு பணிகளுக்காக குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த   குரூப் 4 தேர்வில் வெற்ற 10,205 பேர் அரசின் பல்வேறு துறைகளில் இளநிலைப் பணியாளர்களாகப் பணியில் சேர உள்ளனர். அவர்களுக்கான பணியானை இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை  நடைபெற்ற விழாவில், தேர்வில் வெற்றி பெற்றோருக்குப் பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கி, பேசினார். இளநிலை உதவியாளர்கள் 5,278, தட்டச்சர்கள் 3,339, சுக்கெழுத்தாளர்கள் 1,077, கிராம நிர்வாக அலுவலர்கள் 425, வரி தண்டலர்கள் 67, களஉதவியாளர்கள் 19 பேர் ஆகியவைகளுக்கு பனி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,  ’’அரசுப் பணி வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. அரை அணா காசு என்றாலும் அரசாங்க காசு என்று கிராமங்களில் சொல்வார்கள். அரசு வேலைக்கான மவுசு என்றுமே குறையாது. அரசுப் பணியில் சேரும் நீங்கள் மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு சேர்க்கும் பணியை எந்தக் குறையும் இன்றி நிறைவேற்ற வேண்டும்’’

அரசு எந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமெனில் அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என்றவர்,  அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்லபட்டு வருகிறது.  கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார். ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.