கோவை: கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் கோவையில் அதிரடியாக சோதனை நடத்தினர். கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  தற்போது  13வது நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கோவை  உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது. பயங்கரவாதி  ஜமேசா முபின்  என்பவர், குண்டு வைக்க ஏதவாக காரில் சிலிண்டர் ஏற்றிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிர்நாடு அரசு காவல்துறை விசாரித்து வந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பின் தீவிரம் கருதி, இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை  தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கோவை, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல முறை சோதனைகளை நடத்தி வரும் என்ஐஏ, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனைகளின்போது ஏராளமான ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ள நிலையில், 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை  காவலில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முகமது அசாருதீன் மற்றும் இத்ரீஸ் என்ற இரு இளைஞர்கள், ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணயை தொடர்ந்து,  அவர்களை கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள குழந்தை கவுண்டர் பகுதி வீதியில் அழைத்து வந்து இன்று  விசாரணையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் அசாருதீன்  என்பவர் கோவை ஜிஎன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை நேரடியாக அழைத்துவந்து விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது வரை 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீனை சந்தித்து வந்த பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அவர் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள் மற்றும் இடங்களில் அழைத்து சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.