சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,  ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 -ஆம் ஆண்டு முதல் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16-ம் தேதி ‘தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, 1956- ஆம் ஆண்டு பத்திரிகை நெறிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என நோக்கத்தில் சட்டப்பூர்வ அதிகாரத்துடன் கூடிய ஒரு அமைப்பை உருவாக்க பத்திரிகை ஆணையம் முடிவு செய்தது.  அதன்படி, பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ள, ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் நடுவராக செயல்பட ஒரு நிர்வாக அமைப்பு தேவை என்று உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. அதனடிப்படையில் இந்திய பத்திரிகை கவுன்சில் உருவானது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய அங்கமாக விளங்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிகை கவுன்சில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் 28 கூடுதல் உறுப்பினர்கள் என ஒரு குழுவாக தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். இதில் 20 பேர் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். 5 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பரிந்துரைக்கப்படுவார்கள். மீதமுள்ள 3 பேர் கலாசார, சட்ட மற்றும் இலக்கியத் துறைகளைப் பிரநிதிப்படுத்தும் வகையில் இருப்பர்.

இநத் நிலையில், தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு  பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  “ உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சி யின் கண்காணிப்பாளர்! எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சார்பற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்த, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம். “ என்று  குறிப்பிட்டுள்ளார்.