சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமீபத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை  கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர். இன்று மாலை சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய தலைவர்கள பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளையொட்டி, அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதுபோல  ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்  “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.அதுபோல, இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயர் டாக்டர் மோனிகா தேவேந்திரன் . முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், உள்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.