சென்னை:
கொரானா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அறை மூடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. நோய்த் தொற்று பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் நர்ஸ் ஒருவர் உள்பட 38 பேர் கொரோனாவுக்கு பலி ஆனார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடிக் கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,415 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்ந்து நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்து இருக்கிறது.


நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 38 பேர் பலி ஆனார்கள். இவர்களில் ஒரு நர்ஸ் உள்பட 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் உயிரிழந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 782 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 599 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட இருக்கிறது. இதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 401 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும், 537 பேரின் மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரியவந்து உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 76 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 326 முதியவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 270 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 139 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு கொரனா தொற்று உறுதியானதால் தடுப்பு நடவடிக்கையாக பத்திரிகையாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பத்திரிக்கையாளர் அறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்ட பின் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.