புதுடெல்லி:

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்என்.சுக்லாவை பதவி நீக்கம் செய்யும் கண்டன தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு, பிரதமர் மோடிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார்.

நீதிபதி எஸ்என்.சுக்லா

பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நீதித்துறையின் உயர் பதவியில் இருக்கும் கருப்பு ஆடு களையப்பட வேண்டும் என்பதால், இந்த விசயத்தில் பிரதமர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே,  நீதிபதி சுக்லாவை பதவி நீக்கம் செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார்.

விசாரணைக் குழுவின் இறுதி முடிவுக்குப் பின், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி முதல் அவருக்கு பணி வழங்கப்படவில்லை.

மீண்டும் தனக்கு நீதித்துறை பணி தருமாறு சுக்லா விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவில் சுக்லா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவரை பணியில் தொடர அனுமதிக்கவில்லை.

இந்த சூழலில், நீதிபதி சுக்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் கொண்டு வர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அட்வகேட் ஜெனரல் புகார் 

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா நீட்டித்ததாக, கடந்த 2017-ம் ஆண்டு உத்திரப்பிரதேச அட்வகேட் ஜெனரல் ராகவேந்திர சிங் புகார் அளித்திருந்தார்.

இதில், நீதிபதி சுக்லா முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின்பேரில், நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு இந்த புகார் குறித்தது விசாரித்தது.

இந்த புகாரில், போதுமான ஆதாரம் இருப்பதாக விசாரணைக்குழு இறுதி செய்தது. சுக்லாவை பதவி நீக்கம் செய்ய முகாந்திரம் இருப்பதாக விசாரணைக்குழு முடிவு செய்தது.

இதனையடுத்து, நீதிபதி சுக்லாவை பதவி விலகுமாறோ அல்லது தானாக ஓய்வு பெறுமாறோ அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா உத்தரவிட்டார்.

ஆனால், பதவி விலக சுக்லா மறுத்துவிட்டார். இதனையடுத்து, அப்போதைய அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிபி.போஸ்லே, அவரை பொறுப்புகளிலிருந்து விடுவித்தார்.

அதேசமயம், நீதிபதி சுக்லாவை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இந்த சூழ்நிலையில்தான், தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுப்பியுள்ளார்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முன், நாடாளுமன்ற இரு அவைகளிலும் கண்டன தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நடைமுறையாகும்.