குடியுரிமை திருத்த மசோதா மிகக்கொடிய சட்டம்! மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

Must read

டெல்லி,

பாராளுமன்ற மக்களவையில் நேற்று குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப் பட்ட நிலையில், விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய, மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன், குடியுரிமை மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

குடியிருப்பு மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ய  ஆதரவாக 293 உறுப்பினர்களும், 82 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். முன்னதாக, மசோதாவை அறிமுகம் செய்வது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், திரிணாமுல் உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, சவுகதாராய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இ.டி.முகமது பஷீர்,  அகில இந்திய மஜ்லிஸ் இத்தாகதுல், முஸ்லிமீ கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், புரட்சி சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

விவாதத்தின்போது பேசிய கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் பேசியதாவது,

இந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவை அடுத்த பல ஆண்டு கள் அலைக்கழிக்கப்போகிற மிகக்கொடிய சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு, மத அடிப்படை யில் குடியுரிமை வழங்க இயலாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது. இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த மரபுகளுக்கு எதிரானது. இந்திய அரசினுடைய முகப்புரையில் வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு இந்த சட்டம் நிறைவேறினால் இந்தியா தனது மனிதாபிமானமிக்க கோட்பாட்டினை அதி காரப்பூர்வமாக கைவிடுகிற ஒரு கொடிய நாளாக இது இருக்கும் என்று குறிப்பிட விரும்புகிறோம்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் மதரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால், அது மட்டும்தானா ஒடுக்கப்படுவ தற்கான கருவி என்பதை இங்கே நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மியான்மரைப் பற்றி, இலங்கையைப் பற்றி நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்? இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கான அடிப்படை என்பது சிங்கள – பவுத்த பேரினவாதம் என்பதையும் நாம் அறிவோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 107 முகாம்களில் 59ஆயிரத்து 714 பேர் அகதிகளாக இருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். இங்கேயே பிறந்து வளர்ந்து இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்.

எனவே இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். இந்த சட்டத்திருத்தம் இருக்கிற அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது.

அதே நேரத்தில் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் அளிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். நாட்டில் நிலவும் எத்தனையோ பிரச்சனை களுக்கு தீர்வுகாண்பதற்கு மாறாக, எண்ணற்ற புதிய பிரச்சனைகளை உருவாக்குகிற சட்டமாக  இந்த சட்டம் இருக்கிறது. இந்த நாடாளுமன்றத்தில் உள்ள முகப்பில் ஒரு வாக்கியம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் கள் அனைவரும் அந்த வாக்கியத்தைக் கடந்து தான் உள்ளே நுழைகிறோம். அதன் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்தியா என்பது மத ஒடுக்குமுறை களுக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் யூதர்களாக இருந்தாலும், பார்சிகளாக இருந்தாலும், ஏமனைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், திபெத்தியர்களாக இருந்தாலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தியாவை தங்கள் இல்லமாகக் கருதலாம் என்று அந்த வாக்கியம் சொல்கிறது. இந்த சட்டத்திருத்தம் நிறை வேறினால், அவர்கள் இந்தியாவை இல்லமாக ஒருபோதும் கருதமாட்டார்கள்.

அன்பினால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாட்டை இன்றைக்கு மிக மோசமானதாக மாற்றுகிறீர்கள். உள்துறை அமைச்சர் சொல்கிறார், மக்கள் எங்களுக்கு அதி காரம் வழங்கியிருக்கிறார்கள் என்று. உண்மை,  ஆளுகிற அதிகாரத்தைத்தான் மக்கள் உங் களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர, இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்கு கொண்டுசெல்லுகிற அதிகாரத்தை உங்களுக்கு மக்கள் வழங்கவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல விரும்புகிறோம்.

இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

More articles

Latest article