டெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா  பல்கலைக்கழக மாணவர்கள் போரட்டம் வன்முறையாக  மாறி, வாகனங்கள்  கொளுத்தப்பட்டது.பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். மேலும், பல்கலைக் கழகத்திற்குள்  நுழைந்து மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

மாணவர்கள்மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கிடையில் டெல்லியில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்காரணமாக, டெல்லியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு்ள்ளனர். மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை  உள்பட இன்று ஒருநாள்  144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.