சினிமா விமர்சனம்: மெட்ரோ

Must read

ய்வு பெற்ற  ஹெட் கான்ஸ்டபிள் ராஜா.  அவரது மனைவி துளசி. மூத்த மகன் அறிவழகன்(சிரிஷ்).. இளைய மகன் மதியழகன்(சத்யா) என்று அளவான அன்பான குடும்பம்.
சிரீஷ், பத்திரிகை ரிப்போர்ட்டர்.  சத்யா, கல்லூரி மாணவர். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த பெண், படாடோட பேர்வழி.  சத்யாவிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக். லேப்டாப், காஸ்ட்லி செல்போன் எல்லாம் வேண்டும் என்று அடுக்குகிறார்.
சத்யா தன் வீட்டில் பைக் கேட்க, “அதற்கு வாய்ப்பு இல்லை” என்று மறுக்கிறார்கள் பெற்றோர்.  ஆனாலும் அண்ணன் சிரீஷ் தம்பிக்காக லோன் வாங்க முயல்கிறார். முடியவில்லை.
இதனால் டென்ஷன் ஆகிறார் சத்யா. இந்த நிலையில் தன்னுடன் படிக்கும் கணேஷ் என்ற மாணவன் ஆடம்பரமாக வாழ்வதைப் பார்த்து, “எப்படி” என்று அவனிடம் கேட்கிறார்.
அவன், சத்யாவை கையோடு அழைத்துச் சென்று பெண்களின் கழுத்துச் செயினை குறி வைத்து அறுக்கிறான். “இப்படித்தான் வசதியாக இருக்கிறேன். வேண்டுமானால் நீயும் வா” என்கிறான். செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு  தாதாவான பாபி சிம்ஹாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறான்.
சத்யாவும் உடன்பட… ஆடம்பரமாக வாழ்கிறான்.
ஒரு கட்டத்தில் சத்யாவின் நடவடிக்கை, அவனது அம்மாவுக்குத் தெரிய வர.. அவள் அவனைக் கண்டிக்கிறாள். ஆனால் சத்யா மாறுவதாக இல்லை. இந்த நிலையில் சத்யா செயின் பறிப்பு ஒன்ற நிகழத்தும் போது, பெரும் விபரீதம் ஒன்று நடந்துவிட… அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
ஹீரோயிசம், குத்துப்பாட்டு, காமெடி அலப்பறைகள் என்று எதுவும் இல்லை. இயல்பான திரைக்கதை. படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர். நடிகர்களதும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
அண்ணன் தம்பியாக வரும் புதுமுகமான சிரிஷும், சத்யாவும் சிறப்பான நடிப்பு.   அப்பா, அம்மா மீது பாசத்தை பொழிவது,   அவர்களது திருமணத் தினத்தை கோலாகலமாக கொண்டாடுவது,  எல்லாம் அருமை.  அதே போல, தம்பிக்காக துடிக்கும் பாசம்,  தம்பியின் செயின் பறிப்பு பற்றி தெரிந்ததும் அவன் முன்னால் தான் மண்டியிட்டு விட்டுவிடும்படி கெஞ்சுவது என்று சிறப்பாக நடித்திருக்கிறார் சிரிஷ்.
download
ஆனாலும் அப்பாவிடமே சிகரெட், கட்டிங் கேட்கும் காட்சியெல்லாம் ரொம்ப ஓவர் இயக்குநரே.. நீக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சிகள்..!
தம்பி சத்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். செயின் பறிப்பை விட்டுவிடு என்று அம்மா சொல்லும்போது, “எனக்கு இதாம்மா பிடிச்சிருக்கு.. தப்பில்லம்மா.. என்னை புரிஞ்சுக்கம்மா..” என்று தன்  கெஞ்சும் காட்சியைச் சொல்லலாம்.
செயின் தாதாவாக வரும் பாபி சிம்ஹா, வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.  ஆரம்பத்தில்  தாதாவாக வந்து மிரட்டுபவர், இறுதியில் போதை மருந்தினால் பைத்தியக்காரன் ரேஞ்சுக்கு போய் பரிதாபத்தை வாரிக்கொள்கிறார்.
ஹீரோயின் மாயாவுக்கு பெரிய வாய்ப்புகள்.  நண்பனாக வரும் செண்றாயனும் ரசிக்க வைக்கிறார்.  
ஜோகனின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.  பின்னணி இசை ஓகே.   என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. அதுவும் டைட்டில் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் அசர வைக்கிறது.
செயின் திருடர்கள் எப்படி உருவாகிறார்கள், யாரை குறிவைக்கிறார்கள், நகையை எப்படி விற்கிறார்கள்.. என்று விவலாவாரியாக சொல்லியிருக்கிறார்.
அதே நேரம் தந்தையிடம், சிகரெட் கட்டிங் கேட்கும் தனயன் என்று காட்சி வைத்திருப்பது ஓவர். மேலும், செயின் பறிப்பு திருடர்களுக்கும் காவல்துறை கருப்பாடுகளுக்கும் இடையே உள்ள உறவைச் சொல்லாதது குறைதான். ஏனென்றால் காக்கி உதவி இல்லாமல், செயின் பறிப்பு திருடர்கள் “தொழில்” நடத்தவே முடியாது என்பது ஊரறிந்த செய்தி.
“நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பார்கள். எதையும் வாங்கிவிட வேண்டும் என்று தூண்டுகிற நுகர்வு கலாச்சாரம் பெருகியதே குற்றங்கள் பெருகக் காரணம் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். 
அதிரவைக்கும் படம். ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

More articles

Latest article