சினிமா தயாரிப்பாளர்களை அலற வைத்துள்ள ‘பைனான்சியர் சங்கம்’…..

Must read

மிழ் சினிமா உலகை சுழல வைக்க ஏற்கனவே  20 க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. இவர்கள் ஒன்று கூடி இழுத்தால் மட்டுமே ,சினிமா தேர் – நிலையில் இருந்து புறப்பட்டு இன்டோர், அவுட்டோர் என்று பயணித்து விட்டு பத்திரமாக மீண்டும் நிலைக்கு வந்து சேர முடியும்.

இந்த நிலையில்- அண்மையில் ‘தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்’ –என்கிற புதிய சங்கம்  கோடம்பாக்கத்தில் முளைத்து- தயாரிப்பாளர்களை அலற விட்டுள்ளது.

சினிமா எப்படி தயாரிக்கப்படுகிறது?

60-70 களில் இருந்த தயாரிப்பு முறை வேறு.இன்றைய தயாரிப்பு முறை வேறு.

அப்போது ஏவி.எம்.,விஜயவாகினி,தேவர் பிலிம்ஸ்,சத்யா மூவீஸ்,கே.பாலாஜியின் சுஜாதா பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களே தமிழ் சினிமாவின் ஆணி வேறாக திகழ்ந்தன.

இந்த ஸ்தாபனங்களின் ஆஸ்தான நாயகன்களாக எம்.ஜி.ஆரும்,சிவாஜியும் இருந்தனர்.இந்த நிறுவனங்கள் –தங்கள் கல்லாப்பெட்டியில் இருக்கும் ரொக்கத்தையே தயாரிப்புக்கு செலவிட்டனர்,

அப்போது ‘பைனான்சியர்கள்’’ ஆதிக்கம் கிடையாது, வேறு சேனல்களுக்கு எம்.ஜி.ஆரும்,சிவாஜியும் சென்ற நிலையில்,அவர்கள் இருக்கையை ஆக்ரமித்துக்கொண்டனர் ரஜினியும், கமலும்.

மேற்சொன்ன அத்தனை தயாரிப்பாளர்களும்-இந்த இளம் நடிகர்களை வளைத்துக்கொண்டனர்.வசூல் பார்த்தனர்.

இன்றைய நிலைக்கு வருவோம்.

மேற்சொன்ன நிறுவனங்கள் ,கிட்டத்தட்ட தயாரிப்பு சமாச்சாரங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு வேறு வேலைகளுக்கு போய் விட்டன.

எக்கச்சக்கமாக புதிய தயாரிப்பு நிறுவனங்கள் வந்து விட்டன.படத்துக்கு பூஜை போட்டு -கையிருப்பு இல்லாத நிலையில் தலையை சொறிந்து நிற்க அவர்களுக்கு உதவ முன் வந்தார்கள்- பைனான்சியர்கள்.

தமிழ் சினிமாவில் –சன் பிக்சர்ஸ்,லைகா,ஏ.ஜி.எஸ்.உள்ளி ட்ட சொற்ப தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் பர்சில் இருந்து பணத்தை எடுத்து கொடுப்பவை . மற்ற பெரும்பாலான தயாரிப்பாளர்கள்-பைனான்சியர்களை நம்பி இருப்பவர்கள்.இன்றைக்கு .பைனான்சியர்கள் பணம் தான் 90 சதவீதம் கோடம்பாக்கத்தில் புழங்கி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்-

அண்மையில் ‘தென்னிந்திய சினிமா பைனான்சியர்கள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளனர்,பைனான்சியர்கள்.

இதனால்  தயாரிப்பாளர்கள் மிரட்சி அடைந்துள்ளனர்.

ஏன்?

‘’ஏற்கனவே சில பைனான்சியர்கள் கெடுகிடியால் –சில தயாரிப்பாளர்களின் துர் மரணங்களை பார்த்து விட்டோம் தனித்தனியாக இருந்த போதே அநியாய வட்டி-அச்சுறுத்தல் என தயாரிப் பாளர்களை அலற வைத்தனர். இப்போது சங்கமே ஆரம்பித்து விட்டார்கள். என்ன நடக்கப் போகிறதோ?’’ என்று கன்னத்தில் கை வைத்து கவலையில் ஆழ்ந்தார் ஒரு தயாரிப்பாளர்.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article