டில்லி

பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள்  குறித்த தகவலை அளிக்க வேண்டும் என அரசு நிறுவனமான  மத்திய செய்தி ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தை உபயோகித்து வருகிறார்.   இதற்கான கட்டணங்களை அரசு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு  செலுத்துகிறது.   இது குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பாத்ரா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.   அந்த மனுவில் பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்துக்காக ஏர் இந்தியா வசூலித்துள்ள கட்டணங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமரின் சுற்றுப்பயண விவரங்கள் அரசு தொடர்பானது என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றை வெளியிட முடியாது என அறிவித்தது.   இந்த அறிவிப்பை எதிர்த்து லோகேஷ் பாத்ரா மேல் முறையீடு செய்தார், அவர், “ஏர் இந்தியா என்பது அரசு நிறுவனம்.   மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம் மற்ற அரசு பணிகளுக்கு விமானங்கள் வாடகைக்கு அனுப்பும் போது அது  அரசு சம்பந்தப்பட்டவை அல்ல.  வியாபார சம்பந்தப்பட்டவையே” என மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மத்திய செய்தி ஆணையம் ஒரு அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், “அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களை அரசு அனுமதி இன்றி வெளியிடக்கூடாது என்பது சரியானதே.   ஆனால் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண அரசு சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டும் இல்லை.  பொதுவானதாகும்.

மேலும்  இந்த விவகாரங்கள் ரகசியமானதும் இல்லை.  பணம் பெற்றுக் கொண்டு ஏர் இந்தியா விமானம் தருகிறது.   அதனால் இது வியாபார விவகாரமே.   மேலும் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் அனைவருக்கும் தெரியும் படி நிகழ்கிறது.  இது குறித்த விவரங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஏற்கனவே வெளியானது.

எனவே இதில் மறைக்கும் படியான அரசு ரகசியம் ஏதும் இல்லை.   அதனால் ஏர் இந்தியா பிரதமர் கடந்த 2016-17 கால கட்டத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய விவரங்களை இன்னும் 7 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளது.