லக்னோ,

உ.பி. மாநிலத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது என இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, ‘தி ஹிந்து ஜக்ரான் மார்ச்’ என்ற அந்த அமைப்பு பள்ளிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

அலிகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அந்த அமைப்பு எழுதி உள்ள கடிதத்தில், பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடக்கூடாது என்றும், அப்படி மீறி நடத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பு என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளது.

இந்த சம்பவம்  நாடு முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எச்சரிக்கையால் சில பள்ளிகள், கல்லூரிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஸ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் துணை அமைப்பான  ‘தி இந்து ஜக்ரான் மார்ச்’ என்ற அமைப்பே இந்த கடிதத்தை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடிதம் கிறிஸ்துவ பள்ளிகளை குறிவைத்து அனுப்பப்பட்டு உள்ளதாகவும், எந்த பள்ளியும் அந்நிய நாட்டு விழாக்களை இந்த பூமியில் கொண்டாட கூடாது என்பதை தெளிவு படுத்தவே இந்த கடிதம் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அனுப்பப்பட்டு உள்ளதாக தி இந்து ஜக்ரான் மார்ச் என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதன் காரணமாக உ.பி.மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன.