சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி செயல்பட, தற்காலிக இடத்தை மாநில அரசு தேர்வு செய்து அறிவித்தால், அதை ஆய்வு செய்து, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்று  மத்தியஅரசு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் வலியுறுத்தலின்பேரில்,  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளை கடந்தும், இன்னும் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடையாளமாமே தென்படாத நிலை உள்ளது.

இந்த விவகாரம் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. அதிமுக அரசின் அலட்சியம் காரணமாக மதுரை எய்ம்ஸ் கல்லூரி இன்னும் அமைக்கப்படவில்லை என்று, உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் என்ற எழுதிய செங்கல்லைக்கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்ததும், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான பணியை உடனே தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலூம் நேரில் பிரதமர் மோடியை சந்தித்தபோதும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில்,  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கி எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவானது விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்க  மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம் என்று கூறியது.

இந்த நிலையில் தமிழக அரசின் கடிதத்திற்கு  தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பதில் அளித்துள்ளார். தமிழக தலைமைச் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்காக  தற்காலிக இடத்தை தேர்வு செய்தால், அதை ஆய்வு செய்து,  நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், அதற்கான  செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.