திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்ற காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தமிழகஅரசு அனுமதி மறுத்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் எப்போதும்போல சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும். இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் முதல் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான உணவு, கழிப்பிடம், தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்கள் வசதிக்காக 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில்,  9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும்,, கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி, அவசர மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏதுவாக 40 இடங்களும்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும். கிரிவலப் பாதையை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.