நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியை காண லட்சக்கணக்கானோர் ஊட்டியில் குவிவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் தொடங்கி உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க ஏராளமானோர் அங்கு சென்று வருகின்றனர். இதனால் ஊட்டி மலை போக்குவரத்து இப்போதே நெரிசலாக காணப்படுகிறது.

இந்த நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இது தவிர சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கண்காட்சியில் பல வண்ண மலர்களை கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விலங்குகள், பல்வேறு வடிவிலான பொருட்கள் வடிவமைக்கும் பணியும் நடந்தும் வருகிறது.

மலர் கண்காட்சி  கண்டு ரசிக்க தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தேவையான  ஏற்பாடுகளை மாவட்டம் மற்றும் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.