பாட்னா: லோக் ஜனசக்தி கட்சிகுள் நடைபெற்றுவந்த குடும்ப மோதலில், கட்சியை மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் தம்பி,. பசுபதிகுமார் பராஸ் கைப்பற்றினார். இதையடுத்து, கட்சித்தலைவரும், ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான  சிராக் பஸ்வான் கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மறைந்த ராம்விலாஸ் பஸ்வான். இவர் கடந்த 2000ம் ஆண்டில், லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் பங்கேற்று வந்தார்.  இவர் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்று எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பதவி பெற்றார். இவர் கடந்த ஆண்டு (2020) அக்டோபரில் அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இக்கட்சி தலைவராக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவரது குடும்பத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, என்டிஏவில் வெளியேறி லோக் ஜன சக்தி கட்சி தனித்து போட்டியிட்டது. கட்சியின் புதிய தலைவரான ராம்விலாஸின் மகன் சிராக் பாஸ்வான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டார். தேர்தலில் பஸ்வான் கட்சி படுதோல்வி அடைந்தது.

முன்னதாக அக்கட்சிக்கு  சிராக் பஸ்வானுடன் சேர்த்து 6 எம்.பி.க்கள் இருந்தனர். சமீப காலமாக சிராக் பஸ்வானுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணாக, மீதமுள்ள 5 எம்.பி.க்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதற்கு பின்னணியில் ராம்விலாஸ் பஸ்வானின் சகோரர்  பசுபதிகுமார் பராஸ் செயல்பட்டு வந்தார். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், 5 எம்.பி.,க்களும், இன்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து பசுபதிகுமார் பராஸை , பார்லிமென்ட் குழு தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து சிராக் பஸ்வானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கட்சி உடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியை முழுமையாக பசுபதிகுமார் பஸ்வான் கைப்பற்றி உள்ளார். அதைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் பதவயில் இருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து பசுபதிகுமார் பராஸ் தலைமையின் கீழ் லோக் ஜனசக்தி கட்சி வந்துள்ளது. கட்சியின் செயல் தலைவராக சூரஜ் பான் அறிவிக்கப்பட்டு உள்ளார்.