சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கெரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்,

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடுமையாக இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் பெரும்பாலான மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும் 11 மாவட்டங்களில் இன்னும் தொடர்ந்து வருகிறது.  தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10-ந்தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2 வார முழு ஊரடங்குக்கு பிறகு தொற்று ஓரளவு குறையத் தொடங்கியதும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய விற்பனை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. தளர்வுகளுடன் ஊரங்கு 21-ந்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று 24 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலுர், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 22  மாவட்ட ஆட்சியர்கள் நேரிலும், 2 மாவட்ட ஆட்சியர்கள் காணொலியிலும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு, தற்போதைய நிலவரங்கள், ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் மேலும் பல தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது குறித்து கலெக்டர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார். முழு ஊரடங்கு  நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்தை மீண்டும்  தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே பொது போக்குவரத்தை தொடங்கலாமா? என்பது பற்றி முக்கியமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொது விநியோக திட்டத்தில் உணவுப் பொருட்கள் சுத்தமானதாகவும் – தரமானதாகவும் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்  என்றும் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும், நகர்ப்புற, ஊரகப் பகுதி காலிப் பணியிடங்களை தகுதியான நபர்கள் கொண்டு நிரப்பிட வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைகுமாறு ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவிறுத்தப்பட்டது.

மேலும்,

  1. வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு
  2. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி,
  3. அனைவருக்குஙம் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம்
  4. எழில்மிகு மாநரங்களின் மாநிலம்
  5. உயர்தர ஊரக கட்டமைப்பு , உயர்ந்த வாழ்க்கைத்தரம், 
  6. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்
  7. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.