சென்னை

ரு இணைய தளத்தின் விளம்பரத்துக்கு தமாஷாக பாடகி சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் தனது டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

ஆன்லைன் வியாபாரத் தளமான ஸ்னாப் டீல் நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது.  அதில்  ஐஸ்வர்யா ராய் வேகமாக ஓடுவதைப் போல் திரைப்பட புகைப்படம் ஒன்று இருந்தது.  மேலே ”உங்கள் கணவர் நீங்கள் ஆன்லைனில் எவ்வளவு ஷாப்பிங் செய்துள்ளீர்கள் என கண்டுபிடிக்கும் முன் ஓடி விடுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பெண்ணிய வாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இது ஆணின் பணத்தை தேவையின்றி செலவழிப்பதே பெண்களின் முக்கிய வேலை என குறிப்பிடுவதாக கூறி பல பெண்ணியவாதிகள் விமர்சித்தனர்.

இதற்கிடையே பாடகி சின்மயியின் கணவரும், நடிகருமான ராகுல் ரவிந்திரன் ஒரு டிவிட்டை பதிந்துள்ளார்.   அதில்,”என் மனைவி என்னை விட அதிக வருமானம் வருவதை பதிந்துள்ளார்.  அவர் ஷாப்பிங் செலவை அவரே பார்த்துக்கொள்கிறார்.  எனவே அவர் ஓடத் தேவையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது டிவீட்டை நியாயப்படுத்தும் வகையில் மேலும் பல பின்னூட்டங்களும் பதிந்துள்ளார் ராகுல்.    மற்றும் ஆண்களும் பல நேரங்களில் தேவையற்ற பொருட்களை வாங்குவதாகவும் ஆனால் விளம்பரங்கள் பெண்களையே தவறாக காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.   அது மட்டுமின்றி அவர்கள் விளம்பரத்தில் காட்டிய ஐஸ்வர்யா ராய் திரையுலகில் அதிகம் ஊதியம் ஈட்டும் பெண்களில் ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய ட்வீட்டுகள் பல பெண்களையும் ஈர்த்துள்ளது.  அவர்களில் ராகுலின் மனைவி சின்மயியும் ஒருவர்.  அவர் தனது ட்வீட்டில், ”இது போல கணவர்தான் பெண்களுக்குத் தேவை.  பெண்களே  நீங்களும் உங்கள் பெற்றோரும் இதுபோல கணவரையே தேர்ந்தெடுங்கள்.  சுதந்திர தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.