சென்னை:

நாளை சீன அதிபர் சென்னைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சீன அதிபர் மாமல்லபுரம் செல்லும் ஓஎம்ஆர் சாலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும்,  மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்பு புராதன நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு காரணமாக சென்னை முதல் மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், சீன பிரதமரை வரவேற்கும் விதமான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர விடுதி மற்றும், அங்கிருந்து ஓஎம்ஆர் சாலை வழியாக மாமமல்லபுரம் செல்ல உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்லவும் காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ஓஎம்ஆர் சாலையில் உள்ள பொறியியல் கல்லூரிகள் நாளை விடுமுறை அறிவித்து உள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடாமல், வாய்வழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல, ஓஎம்ஆர் சாலையில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும், சில நிறுவனங்கள், நாளை முதல் விடுமுறை விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் தகவல்படி, நாளை விடுமுறை என்று ஏதும் அறிவிப்பு வெளியிடப் படவில்லை என்ற கூறினாலும், அடையாறு, திருவான்மியூர், ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் உள்ள பல பள்ளிகள், கல்லூரிகள் நாளை விடுமுறை விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன,