பீஜிங்

சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா டெல்டா வைரஸ் பரவுவதால் அங்கு வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் முதலாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.    அதன்பிறகு அந்த மாகாணம் முழுவதும் வேகமாகப் பரவி பின் உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியது.  சென்ற இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை ஆட்டி வைக்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலும் நடைபெற்று வருகிறது.

சீன அரசு அந்நாட்டில் கொரோனா வைரஸ் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவித்திருந்தது.   ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கி உள்ளது.  இது டெல்டா வகை வைரஸ் எனக் கூறப்படுகிறது.   இதுவரை ஊகான் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக வூகான் நகரில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது.  அனைத்து இடங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளைச் சீன அரசு தீவிரமாக்கி உள்ளது.  குறிப்பாக வூகான் நகரில் வசிக்கும் அனைத்து 1.2 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக வூகான் நகர அதிகாரி அறிவித்துள்ளார்.