டில்லி:

ந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள ஆறு ஊர்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது.

வெகு காலமாகவே இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை தனது பகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது சீனா. இம்மாநிலத்தை தெற்கு திபேத் என்று அழைத்துவருகிறது.

இப்பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மத்திய அரசு தொடர்ந்து தெளிவு படுத்தி வருகிறது.

ஆனாலும் சீனா தனது போக்கில் இருந்து மாறவில்லை. சமீபத்தில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், சீனா செல்ல விசா கோரியபோது, “நீங்கள் வசிக்கும் அருணாசலபிரதேசம் சீன பகுதிதான். ஆகவே விசா தேவையில்லை” என்று சொல்லி இந்திய தரப்புக்கு ஆத்திரமூட்டியது சீனா.

சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபேத்தில் இருந்து வெளியேறிய தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தில் இருந்தே சீனா இதுபோன்ற போக்கை கடைபிடித்துவருகிறது.

மேலும், இந்தியா – சீனா இடையேயான மக்மாகன் எல்லோக்கோட்டு பகுதியில் 3,488 கி.மீ., நீளம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது இந்த எல்லை பிரச்சினை காரணமாக 1962ம் வருடம் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது.

எல்லைப் பிரச்சினையை தீர்க்க  இரு நாடுகளும்  சிறப்பு பிரதிநிதிகளை அனுப்பி, 19 முறை பேச்சு வார்த்தை நடத்தி உள்ளன. ஆனாலும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

இந்த நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் தலாய்லாமா சுற்றுப்பயணம் செய்தார். இதற்கு தேவையின்றி சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

தொடர்ந்து தற்போது அருணாசல பிரதேசத்தில் உள்ள ஆறு ஊர்களின் பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்தது. சீன பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் இந்த பெயர் மாற்றம் நடந்ததாகவும் அறிவித்துள்ளது.

சீனாவின் சிவில் விவகாரத்துறை அமைச்சகம், “ தெற்கு திபேத்தில் (அருணாசல பிரதேசம்) உள்ள ஆறு  இடங்கள் சீன மற்றும் ரோமானிய எழுத்துக்களால் முறைப்படுத்தப்பட்டுள்ளன. முறையே அவை, வோக்யைன்லிங், மிலா ரி, குவாய்தெங்கர்போ ரி, மைன்குகா, புமோ லா, நம்காபுப் ரி, என பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது சட்டபூர்வமான அறிவிப்பு” என்று தெரவித்துள்ளது.

இது குறித்த செய்தி சீன அரசால் வெளியிடப்படும், ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது

சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.