அருணாச்சலப் பிரதேசத்துக்கு நிர்மலா சீத்தாராமன் சென்றதுக்கு சீனா ஆட்சேபம்!!

Must read

பெய்ஜிங்:

அருணாசலப் பிரதேசத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

அருணாசலப் பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த 5ம் தேதி சென்றார். அப்போது அவர் சீனா எல்லைப் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். போர் ஆயத்த நிலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இதற்கு சீனா தற்போது ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறுகையில், ‘‘ சீனா&-இந்தியா எல்லையில், கிழக்குப் பகுதி பிரச்னைக்குரியதாகும். இந்தச் சூழ்நிலையில் அங்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்றது அங்கு அமைதியைப் பேணுவதற்கு உகந்ததாக இருக்காது.

பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் சீனாவுடன் இணைந்து இந்தியத் தரப்பும் முக்கிய பங்களிப்பை ஆற்ற வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுடன், நிபந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவான இந்த லட்சியத்தை அடைவதிலும், இருதரப்பும் ஏற்கக்கூடிய தீர்வு, பரஸ்பர கவலைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வது ஆகியவற்றிலும் சீனாவுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

அருணாசலப் பிரதேசத்தை சீனா தங்களது பகுதி என்று உரிமை கொண்டாடி வருகிறது. அந்தப் பகுதிக்கு இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் ஆகியோர் செல்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அங்கு புத்த மதத் தலைவர் தலாய் லாமா சென்றதற்கும் சீனா ஆட்சேபம் தெரிவித்தது.

More articles

Latest article