பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் பிரிட்டன் ராணி!!

Must read

லண்டன்:

பனாமா பேப்பர்ஸை தொடர்ந்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளிநாடுகளில் உலக விவிஐபிக்களின் சட்டவிரோத முதலீடு பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், சிறிய தீவு நாடுகளில் பிரிட்டன் ராணி எலிசபெத் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் பெயரும் உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியது அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு பனாமா பேப்பர்¬ஸ் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, அதே அமைப்பு தற்போது பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடு ஆலோசனைகளை அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் இரு நிறுவனங்கள் வழியாக 19 வரியில்லா சொர்க்கங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், அங்குள்ள வங்கிகளில் பெரும் தொகை வைத்துள்ளவர்கள் குறித்து 1.34 கோடி ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் பிரிட்டன் ராணி எலிசபெத், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜீஸ், அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ், இந்திய மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எலிசபெத் ராணியின் சார்பில் கேமென் தீவுகள், பெர்முடா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். பெர்முடாவில் உள்ள நிறுவனத்தில் 50 லட்சம் பவுண்ட் தொகையை கடந்த 2004-ம் ஆண்டில் முதலீடு செய்துள்ளார். அதனை 2010-ம் ஆண்டில் திரும்பப் பெற்றார்.

கேமென் தீவுகளில் அமைந்த ஒரு நிதி நிறுவனத்தில் 75 லட்சம் பவுண்டை 2005ம் ஆண்டில் முதலீடு செய்துள்ளார். பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் ராணி பெயர் இடம் பெற்றது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் ரஷிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள விவரமும் பாரடைஸ் ஆவணம் மூலம் தெரிய வந்துள்ளது.

More articles

Latest article