பீஜிங்

சீனாவில் கடந்த ஐந்தாண்டுகளாக திருமண எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது.

சீனாவில் தற்போது விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. தினசரி வாழ்க்கைச் செலவை சமாளிக்க மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டு விலை மற்றும் வாடகை ஆகியவை சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு சீனாவின் மக்கள் தொகை தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது. ஆகவே சீன அரசு ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது.

ஆனால் மேலே கூறியதற்கு நேர்மாறாக கடந்த ஐந்து வருடங்களாக சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு மக்கள் தொகையைல் 1000 பேரில் 9.9 பேர் திருமனம் செய்துக் கொண்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் 1000 பேரில் 7.2 பேர் மட்டுமே திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இதற்கு சீனாவின் விலைவாசி உயர்வு முக்கிய காரணம் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைய சமுதாயத்தினர் இடையே ஏற்பட்டுள்ள பொருளாதார விழிப்புணர்வு காரணமாக பலர் பொருள் ஈட்டுவதில் காட்டும் அக்கறையை திருமண வாழ்வில் காட்டுவதில்லை என தெரிய வந்துள்ளது. இந்த மனநிலை கடந்த 1980 மற்றும் 1990 களில் பிறந்தவர்களிடம் அதிகமாக உள்ளது. இவர்களில் பலர் தாமதமாக திருமணம் செய்துக் கொள்ளவும் ஒரு சிலர் திருமணமே வேண்டாம் எனவும் தீர்மானம் செய்துள்ளனர்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளிதழான மக்கள் தினசரி ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப் போடுவதன் காரணத்தை கேட்டிருந்தது. அந்த கணக்கெடுப்பில் சுமார் 33,330 இளைஞர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

அவர்களில் 29.5% பேர் தங்களுக்கு பொருத்தமானவரை இன்னும் சந்திக்கவில்லை என பதில் அளித்துள்ளனர். குடும்ப சுமை காரணமாக மணம் புரியவில்லை என 23.4% பேர் தெரிவித்துள்ளனர். இதைத் தவிர தனியாக இருப்பதை விரும்புவதக 16.5% பேரும் நிலையற்ற வாழ்க்கை வாழ்வதாக 12.3% பேரும் அதிக வேலைப்பளு என 8.8% பேரும் தெரிவித்துள்ளனர்.